கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை... காப்பாற்ற முயன்ற வாலிபர்கள் கைது - கர்நாடகத்தில் அதிர்ச்சி!
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் நடைபயிற்சிக்குச் சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் தப்பவிடப்பட்ட நிலையில், அவரைத் தடுத்து காப்பாற்ற முயன்ற இரண்டு வாலிபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை பகுதியில் மாணவி ஒருவர் வழக்கம்போல் நடைபயிற்சிக்குச் சென்றபோது, அங்கு வந்த சுதிப் (27) என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாலியல் தொல்லையால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம்பேட்டு அலறியுள்ளார். அந்த அலறல் சத்தத்தைக் கேட்டு உடனே ஓடிவந்த சேத்தன் மற்றும் ரோகன் ஆகிய இரு வாலிபர்களும் மாணவியைக் காப்பாற்றும் நோக்கில், தொல்லை கொடுத்த சுதிப்பை மறித்துத் தாக்கியுள்ளனர்.

ஆனால், இச்சம்பவத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதன்மைக் குற்றவாளியான சுதிப்பைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவரைத் தாக்கிக் காப்பாற்ற முயன்ற சேத்தன் மற்றும் ரோகன் ஆகிய இரண்டு வாலிபர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமக்குத் தீங்கிழைத்த குற்றவாளியைத் தப்பவிட்டுவிட்டு, தனக்கு உதவியாக வந்த வாலிபர்களைப் போலீசார் கைது செய்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, கண்ணீருடன் காவல் நிலையத்திற்குச் சென்று அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், உண்மையான குற்றவாளியான சுதிப் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து முறையிட்டுள்ளார்.
