காதலிக்காக கல்லூரி மாணவர்கள் மோதல் - இன்ஸ்பெக்டர் கார் கண்ணாடி உடைப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே இன்ஸ்டாகிராம் தோழியை யார் காதலிப்பது என்ற விசித்திரப் போட்டியில், இருவேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் காவல் நிலையம் முன்பாகவே கற்களை வீசி பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் தென்மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் 19 வயது மாணவர் ஒருவருக்கும், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதே சூழலில், ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த மற்றொரு கல்லூரி மாணவருக்கும் அதே பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு, அவரும் அந்தப் பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். ஒரே பெண்ணை இரு வேறு கல்லூரி மாணவர்கள் காதலித்து வந்த விஷயம் அண்மையில் இருதரப்புக்கும் தெரியவந்துள்ளது.
அந்த இன்ஸ்டாகிராம் பெண் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக இரு மாணவர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் கடுமையான வாக்குவாதமும், மோதலும் நீடித்து வந்துள்ளது. இப்பிரச்சனைக்கு முடிவு கட்ட இருதரப்பு மாணவர்களும் தங்களது நண்பர்களுடன் கருங்கல் பகுதிக்கு நேரில் வந்துள்ளனர். அங்குப் பேச்சுவார்த்தை முற்றி அடிதடியாக மாறியதால், அப்பகுதியினர் அவர்களைக் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சற்றும் பயமில்லாத அந்த மாணவர்கள் கருங்கல் காவல் நிலையத்தின் நுழைவாயில் முன்பாகவே "அவள் எனக்குத்தான்" என்று கூறி இருதரப்பாகப் பிரிந்து பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
மாணவர்கள் ஒருவரையொருவர் காட்டுமிராண்டித்தனமாகக் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதில், காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கருங்கல் காவல் நிலைய ஆய்வாளரின் காரின் முன்பக்கக் கண்ணாடி பலத்த சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது. காவல் நிலையத்தின் முன்பே அரசு வாகனத்தை உடைத்து மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாகக் களத்தில் இறங்கி வேட்டை நடத்தினர். இதில் மோதலில் ஈடுபட்ட 6 கல்லூரி மாணவர்களைப் போலீசார் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்துக் காவல் நிலையத்திற்குள் இழுத்துச் சென்றனர்.
