இசை நிகழ்ச்சியில் போதை மாத்திரை உட்கொண்ட கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி!
மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள மைதானத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் சிலர் போதை மாத்திரை உட்கொண்டதால் பெரும் விபரீதம் நிகழ்ந்துள்ளது. தென்மும்பையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியைச் சேர்ந்த 15 மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது சக மாணவர் ஒருவர் கொடுத்த போதை மாத்திரையை உட்கொண்டு நள்ளிரவு வரை அவர்கள் உற்சாகமாக ஆட்டம் போட்டதாகக் கூறப்படுகிறது.
திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட 28 வயது மாணவர் ஒருவரும் 24 வயது மாணவியும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். மற்றொரு மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அளவுக்கு அதிகமாக போதை மாத்திரைகளை உட்கொண்டதே இவர்களின் மரணத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் போதை மாத்திரைகளை விநியோகித்த சக மாணவர்கள் 2 பேர் உட்பட மொத்தம் 5 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் தற்போது தங்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இசை நிகழ்ச்சியில் மாணவர்கள் பலியான இந்தச் சம்பவம் மும்பை முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
