வணிக சிலிண்டர் விலையேற்றம்... ஹோட்டல்கள் மூடல்... மே 6-ல் போராட்டம் அறிவிப்பு!

 
ஹோட்டல் சிலிண்டர் ஹோட்டல் சிலிண்டர்

கேரள மாநிலத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து, வரும் மே 6-ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வணிக ரீதியிலான சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளதால், உணவகங்களை நடத்துவதில் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த "நியாயமற்ற" விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர்

மே 6ம் தேதி கேரளா மாநிலம் முழுவதும் உள்ள சிறு உணவகங்கள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உணவின்றி அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து கேரள மாநில ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயபால் கூறுகையில், ஹோட்டல்களை மூடுவது மட்டுமல்லாமல், மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய எண்ணெய் நிறுவன அலுவலகங்களுக்கு முன்பாக மாபெரும் தர்ணா போராட்டங்களும் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை உயர்வால் உணவுகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது சாமானிய மக்களைப் பாதிக்கும் என்பதால், அரசு தலையிட்டு விலையைக் குறைக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

ஹோட்டல் சிலிண்டர்

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஹோட்டல் உரிமையாளர்களின் இந்த வேலைநிறுத்த அறிவிப்பு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைத் தவிர்க்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.