கள்ளச்சந்தையில் வணிக சிலிண்டர் ரூ.6,200-க்கு விற்பனை?! - கதறும் உணவக உரிமையாளர்கள்!
உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தை ஒரு சில கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சமையல் எரிவாயுவை கொள்ளை லாபத்திற்கு விற்று வருவது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான்-அமெரிக்க மோதல் காரணமாக சர்வதேச அளவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்திக்கொண்ட சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த சில ஏஜென்சிகள், சிலிண்டர்களை நுகர்வோருக்குச் சரியாக விநியோகம் செய்யாமல் பதுக்கி வைப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

அரசு தரப்பில் விநியோகம் 70% வரை அதிகரிக்கப்பட்டாலும், கள்ளச்சந்தையில் சிலிண்டர் விலை விண்ணைத் தொட்டுள்ளது: வழக்கமான விலையான ரூ.2,200-க்குப் பதிலாக, தற்போது ரூ.6,200 வரை விற்கப்படுகிறது. சுமார் ரூ.1,000-க்கு கிடைக்க வேண்டிய சிலிண்டர், மறைமுகமாக ரூ.4,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
திடீரென சிலிண்டர் விலை 3 மடங்கு உயர்ந்திருப்பதால் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சிறு குறு வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். "இவ்வளவு அதிக விலை கொடுத்து சிலிண்டர் வாங்கினால், உணவுகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது சாமானிய மக்களைத்தான் பாதிக்கும்" என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஏஜென்சிகளில் நடக்கும் முறையற்ற பதுக்கலைத் தடுக்க எண்ணெய் நிறுவனங்களும், தமிழக அரசு நுகர்வோர் பாதுகாப்புத் துறையும் உடனடியாகக் களத்தில் இறங்க வேண்டும். சட்டவிரோதமாக விலையை உயர்த்தி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தங்குதடையின்றி சிலிண்டர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
