காமன்வெல்த் பளுதூக்குதலில் வெள்ளி வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை... முதல்வர் அறிவிப்பு!

 
விஜய்

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி. அவரது இந்தச் சாதனையப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விளையாட்டு அரங்கில் தமிழக வீரர் நிகழ்த்தியுள்ள இந்த வரலாற்றுச் சாதனை ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் பெருமிதத்தை அளித்துள்ளது. 

வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்துள்ள ராஜா முத்துப்பாண்டி தொடர்ந்து பல புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவர் தனது திறமையால் இந்தியாவிற்கும் தமிழ்நாடு மாநிலத்திற்கும் மேலும் பல சர்வதேசப் பெருமைகளைச் சேர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயங்களில் இருந்து மீண்டு வந்து அவர் நிகழ்த்தியுள்ள இந்த வெற்றி, விளையாட்டுத் துறையில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய தன்னம்பிக்கையை அளிக்கும். விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் சர்வதேச மேடைகளில் சாதிக்க முடியும் என்பதற்கு இவரது வெற்றி சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

காமன்வெல்த் 2026 பளுதூக்குதலில் வெள்ளி வென்றார் ரிஷிகாந்த சிங்: 121 கிலோ தூக்கி புதிய சாதனை!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற ராஜா முத்துப்பாண்டி மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஸ்னாட்ச் முறையில் 126 கிலோவையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோவையும் தூக்கி இந்த அபார சாதனையை அவர் படைத்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் சர்வதேச அரங்கில் பதக்கம் வென்று அசத்தியுள்ள செய்தி சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.