காமன்வெல்த் போட்டி... பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்தி ஊக்கத்தொகை அறிவிப்பு!
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கங்களை அள்ளிய தமிழக வீரர்களுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் வாழ்த்துகளையும் ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். ஒரே போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் பதக்கம் வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சாதனை படைத்த வீரர்களைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்: பிரவீன் சித்ரவேல் (வெள்ளி) - ரூ. 30 லட்சம் மற்றும் செல்வ பிரபு (வெண்கலம்) - ரூ. 20 லட்சம்
இரு வீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயின்று பயிற்சி பெற்றவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், "இவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அரங்கில் இவர்கள் தொடர்ந்து பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
