காமன்வெல்த் பளுதூக்குதல்: தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை!
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் ராஜா முத்துப்பாண்டி ஸ்னாட்ச் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 126 கிலோ எடையைத் தூக்கினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கிளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ எடையைத் தூக்கி அசத்தினார். இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இப்போட்டியில் மலேசிய நாட்டின் வீரர் முஹம்மது அஸ்னில் பின் பிடின், மொத்தம் 299 கிலோ எடையைத் தூக்கி முதலிடத்தைப் பிடித்துத் தங்கப் பதக்கத்தைச் தட்டிச் சென்றார். பப்புவா நியூ கினியா நாட்டின் வீரர் மோரியா பாரு, மொத்தம் 282 கிலோ எடையைத் தூக்கி 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

பளுதூக்குதலில் அடுத்தடுத்து பதக்கங்கள் குவிந்து வரும் நிலையில், காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியிலும் இந்தியா தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது: காமன்வெல்த் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் ஜடுமணி சிங், பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி அபார வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளார். 123 வீரர்கள் அடங்கிய இந்திய அணி, கிளாஸ்கோ காமன்வெல்த் தொடரில் தொடர்ந்து தங்களது திறமைகளை நிரூபித்து பதக்கப் பட்டியலை உயர்த்தி வருகிறது.
