காமன்வெல்த்... பதக்கங்களைக் குவிந்த இந்தியர்கள்... தங்க வேட்டையை ஆரம்பித்து வைத்த மீராபாய் சானு புதிய சாதனை!
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் இறுதிப்போட்டியில் களமிறங்கிய மீராபாய் சானு, அபாரமான திறமையை வெளிப்படுத்தித் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஸ்னாட்ச் பிரிவில் தனது முதல் முயற்சியில் 82 கிலோவைத் தூக்கத் தவறினாலும், 2-வது முயற்சியில் 82 கிலோவைச் சரியாகத் தூக்கினார். தொடர்ந்து தனது 3-வது முயற்சியில் 85 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையைப் படைத்தார். இவர் ஏற்கனவே கடந்த 2018 மற்றும் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான 60 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர் சானம்பம் ரிஷிகாந்த சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் வெள்ளிப் பதக்கம் இதுவாகும்.
காமன்வெல்த் பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர் ராஜா முத்துப்பாண்டி மற்றொரு வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
காமன்வெல்த் போட்டியின் தொடக்கத்தில் இந்திய வலுதூக்குதல் வீரர் ஜாண்டுகுமார் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கான பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்தார். மொத்தம் 123 வீரர்கள் அடங்கிய இந்தியக் குழுவில், பளுதூக்குதல் வீரர்கள் அடுத்தடுத்து பதக்கங்களை அள்ளி வருவது இந்திய விளையாட்டு ரசிகர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
