மதிமுக அலுவலக முற்றுகைக்கு கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

 
சிபிஎம் மு.வீரபாண்டியன் சிபிஎம் மு.வீரபாண்டியன்

காவி உடையில் திருவள்ளுவர் படம் சித்தரிக்கப்பட்ட விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக மதிமுக போராட்டம் நடத்தியதற்குப் போட்டியாக, மதிமுக தலைமையகத்தை முற்றுகையிடப் போவதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது. இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சமூக விரோத சக்திகள் சட்டத்தைக் கையில் எடுப்பதைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

தமிழக ஆளுநர் மாளிகை தரப்பில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் அண்மையில் ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான 'தாயகம்' கட்டிடத்தை இன்று முற்றுகையிடப் போவதாக இந்து முன்னணி உள்ளிட்ட இந்து பரிவார் அமைப்புகள் அறிவித்துள்ளன.

திருமுருகன் காந்தி

இந்து முன்னணியின் இந்தப் போராட்ட அறிவிப்பிற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "தமிழக 'இந்து பரிவார்' அமைப்பு, இன்று எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மு.வீரபாண்டியன் தனது அறிக்கையில், ஜனநாயக ரீதியில் போராடும் அரசியல் கட்சிகளின் தலைமையகங்களை இலக்கு வைத்து இத்தகைய அச்சுறுத்தல் போராட்டங்களை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், "இத்தகைய சமூக விரோத சக்திகள் சட்டத்தைத் தன் கையில் எடுப்பதை தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது" என்றும், மதிமுக அலுவலகத்திற்கு உரியப் பாதுகாப்பு வழங்கி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வைகோ

ஏற்கனவே மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு எதிராகப் பிற்பகல் 2 மணிக்குத் தோழர்களை அணிதிரள அழைப்பு விடுத்துள்ள நிலையில், தற்போது கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது எழும்பூர் பகுதியில் அரசியல் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.