ஜூன் 4ல் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு!
மத்திய அரசால் அண்மையில் உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் ஜூன் 4-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அக்னி வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப் போகுமா என்ற கவலையில் பெற்றோர்கள் இருக்கும் சூழலில், இந்தச் சிலிண்டர் விலை உயர்வு குடும்ப பட்ஜெட்டைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக இடதுசாரித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்வதேச சந்தை நிலவரங்களைக் காரணம் காட்டி, உள்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இது சாமானிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரத்தை அடியோடு நசுக்கும் செயலாக உள்ளது" என்று சாடியுள்ளனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காகப் பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் இந்த விலை உயர்வை மத்திய பா.ஜ.க அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, ஜூன் 4-ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் பெருந்திரளாகப் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
