இயக்குநர் பாரதிராஜா மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல்!

 
கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட்

தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து சிகரமாக உயர்ந்த மூத்த இயக்குநர் பாரதிராஜா, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். இந்தத் துயரச் செய்தியை அறிந்ததும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

பாரதிராஜா

சமூக வாழ்வில் முன்னேறிச் செல்ல தடையாக இருக்கும் சாதிகள் மற்றும் மதங்களின் எல்லைகளை உடைத்து, மனிதாபிமானத்தை உயர்த்திப் பிடிக்கும் கருத்துகளைத் தனது திரைப்படங்களில் வலிமையாக முன்வைத்தவர் பாரதிராஜா என அக்கட்சி பாராட்டியுள்ளது. திரையுலகில் பல சிறந்த இயக்குநர்களை உருவாக்கிய பேராசனாக விளங்கிய அவரது கிழக்கே போகும் ரெயில், முதல் மரியாதை, வேதம்புதிது போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவை என்றும் புகழாரம் சூட்டியுள்ளது.

பாரதிராஜா

திரைப்படங்கள் மட்டுமின்றி காவிரி நதிநீர் பகிர்வு, இலங்கைத் தமிழர் உரிமை போன்ற பொதுநலப் பிரச்சினைகளுக்காகக் களத்தில் நின்றவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.இயக்குநர் இமயம் பாரதிராஜாவை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர், குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.