அரசு ஆவணங்களிலும் முழுமையாக நீக்கம்... ‘பரச்சேரி’ ஊரின் பெயர் ‘வடக்கு அச்சம்தவிழ்த்தான்’ என மாற்றம் - தவெக அரசு அதிரடி உத்தரவு!

 
முதல்வர் விஜய்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் சாதிய அடையாளத்தைக் கொண்டிருந்த 'பரச்சேரி' என்ற கிராமத்தின் பெயர், பொது மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை ஏற்று 'வடக்கு அச்சம்தவிழ்த்தான்' என அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாகத் தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்திற்குட்பட்ட அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் பட்டியலின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதி கடந்த காலங்களில் அரசு ஆவணங்களில் சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையில் 'பரச்சேரி' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சாதியப் பெயரை நீக்கிவிட்டு ஊரின் உண்மையான வரலாற்றுப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகக் கடுமையான கோரிக்கைகளை விடுத்து வந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

தொடர்ந்து கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக கடந்த சட்டமன்றத் தேர்தலையே அந்த ஊர் மக்கள் முழுமையாகப் புறக்கணித்து அதிரடியில் இறங்கினர். தற்போதைய தவெக அரசு பொறுப்பேற்றுக் கடந்த 150 நாட்களுக்குள் மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கமைய, விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு ஆவணங்களில் இருந்து 'பரச்சேரி' எனும் பெயர் முழுமையாக நீக்கப்பட்டு, இனி அப்பகுதி 'வடக்கு அச்சம்தவிழ்த்தான்' என்று அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்கள் வாழும் இந்த ஊருக்குப் புதிய பெயர் சூட்டப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின் பல வருடத் தொடர் போராட்டத்திற்குச் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.