ஆணுறை விலை 30% உயர்கிறது... குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்குச் சிக்கல்?!
மலேசியாவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய ஆணுறைதயாரிப்பு நிறுவனமான கெரெக்ஸ், தனது தயாரிப்புகளின் விலையை 30 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஈரான் போர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலே இந்தத் திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், தற்போது அத்தியாவசியச் சுகாதாரப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. உலகின் ஒட்டுமொத்த ஆணுறைத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் மலேசியாவின் 'கெரெக்ஸ்' நிறுவனம், தனது விலையேற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய ஈரான் போர் காரணமாக, மத்திய கிழக்கிலிருந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்கள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆணுறை மற்றும் லூப்ரிகண்டுகள் தயாரிக்கத் தேவையான நைட்ரைல் , செயற்கை ரப்பர், சிலிகான் ஆயில் மற்றும் பேக்கேஜிங்கிற்குப் பயன்படுத்தப்படும் அலுமினியம் பாயில் ஆகியவற்றின் விலை 30% முதல் 100% வரை உயர்ந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதாலும், சரக்குக் கப்பல்களின் பயண நேரம் இரண்டு மடங்காக அதிகரித்ததாலும் கப்பல் போக்குவரத்துச் செலவு விண்ணைத் தொட்டுள்ளது. கெரெக்ஸ் நிறுவனம் டியூரெக்ஸ், ட்ரோஜன் போன்ற உலகப்புகழ் பெற்ற பிராண்டுகளுக்குத் தயாரிப்புகளை வழங்குவதால், சந்தையில் அனைத்து முன்னணி பிராண்டுகளின் விலையும் உயரக்கூடும்.

சுகாதாரத் திட்டங்கள்: ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு நாடுகளின் அரசு சுகாதாரத் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் இலவச அல்லது மானிய விலை ஆணுறைகளின் விநியோகம் குறைய வாய்ப்புள்ளது. இது வளரும் நாடுகளில் எச்.ஐ.வி தடுப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த விலை உயர்வு குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சீனாவில் மக்கள் ஆணுறைகளை அதிகளவில் வாங்கிச் சேமிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கெரெக்ஸ் சி.இ.ஓ கோ மியா கியாட் கூறுகையில், "இந்தச் சூழல் மிகவும் சிக்கலானது, உற்பத்திச் செலவைச் சமாளிக்க விலையை உயர்த்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
