கணவரின் பூர்வீகச் சொத்து அபகரிப்பு.. தவெகவினர் உடந்தை - முதல்வர் விஜய்க்கு நடிகை ஷர்மிலி கோரிக்கை!

 
ஷர்மிலி

ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் அமைந்துள்ள தனது கணவரின் பூர்வீகச் சொத்து, போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டுள்ளதாகப் பிரபல நகைச்சுவை நடிகை ஷர்மிலி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சொத்து அபகரிப்பு விவகாரம் தொடர்பாக நடிகை ஷர்மிலி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரை நேரில் சந்தித்துத் தகுந்த ஆதாரங்களுடன் புகார் மனுக்களை அளித்துள்ளார். சில தனிநபர்கள் திட்டமிட்டுப் போலி பட்டா மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்து, தனது கணவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சொத்து அபகரிப்புப் பின்னணியில் ஆளும் கட்சியினரின் தலையீடு இருப்பதாகக் கூறி நடிகை ஷர்மிலி அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தச் சட்டவிரோத ஆக்கிரமிப்புச் செயலுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளும், ஆட்களும் பின்னணியில் இருந்து உடந்தையாகச் செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ள தங்களது பூர்வீக நிலத்தை உடனடியாக மீட்டு, தங்களுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நடிகை ஷர்மிலி அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார். ஆளும் த.வெ.க.வினர் மீதே நடிகை ஷர்மிலி சொத்து அபகரிப்புப் புகாரைக் கிளப்பியுள்ள விவகாரம், ராமநாதபுரம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.