தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்.. யார் யாருக்கு அமைச்சர் பதவி?!
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு தனிக்கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்காகக் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது.
இதனைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட உள்ளதாகத் தற்போது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக மற்றும் காங்கிரஸ் இடையே நடைபெற்ற சுமுகமான பேச்சுவார்த்தையின் அடிப்படையில், புதிய அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்குப் பின்வரும் பங்கீடுகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்இருவருக்குத் தமிழக அமைச்சரவையில் முக்கியத் துறைகள் ஒதுக்கப்படவுள்ளன. இது தவிர, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தவெக கூட்டணியால் வழங்கப்பட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவுள்ள அந்த இரண்டு அமைச்சர் பதவிகளுக்கு, கட்சியின் மூத்த மற்றும் முக்கிய முகங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் இருந்து தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜேஷ்குமாருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கப் பிரகாசமான வாய்ப்புள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஸ்வநாதன் பெயரும் அமைச்சர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தங்களது கூட்டணிக் கட்சியான காங்கிரஸை அமைச்சரவையில் இணைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஒரு புதிய "கூட்டணி ஆட்சி" பரிசோதனையைத் தொடங்கவுள்ளது. இதற்கான புதிய அமைச்சர்கள் பட்டியல் மற்றும் அவர்கள் பதவியேற்கும் நாள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
