கேரளாவில் பரபரப்பு - மத்திய அமைச்சர் அமித்ஷா காரை வழிமறித்துக் கருப்புக் கொடி காட்டிய காங்கிரசார்!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காரை இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென வழிமறித்துக் கருப்புக் கொடி காட்டிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் அமித்ஷா கொல்லம் மாவட்டத்திலுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் ஆசிரமம் மைதானத்தில் வந்திறங்கினார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தனது காரில் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குப் புறப்பட்டார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி, மாநிலச் செயல் தலைவர் பினு சுல்லியல் மற்றும் கவுன்சிலர் குருவிலா ஜோசப் தலைமையில் திரண்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் திடீரெனக் காரை வழிமறித்துக் கருப்புக் கொடி காட்டினர்.
இந்தியாவின் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். உடனே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும் மத்திய பாதுகாப்புப் படையினரும் விரைந்து செயல்பட்டுப் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திவிட்டு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இந்த திடீர் மறியல் போராட்டம் காரணமாக மத்திய அமைச்சரின் கார் சுமார் 5 நிமிடங்கள் சாலையில் காத்திருக்க நேரிட்டது. அதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் குண்டரா பகுதிக்குப் புறப்பட்டுச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் கருணாகப்பள்ளியில் நடைபெற்ற மாதா அமிர்தானந்தமயி தேவியின் பிறந்த நாள் விழாவிலும் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.
