காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மோதல்; திருவண்ணாமலையில் பாதியில் ரத்து செய்யப்பட்ட கூட்டம்!

 
காங்கிரஸ்

திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமையில் மறுசீரமைப்பு நிர்வாகிகள் நியமனம் மற்றும் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் அத்தியந்தல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மண்டல பொறுப்பாளர் அருள் பெத்தய்யா மற்றும் மேலிடப் பார்வையாளர் துரைவேலன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் ஒரு பகுதியாக நிர்வாகிகளுக்குச் சால்வை அணிவிக்கப்பட்டு வந்தபோது, மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மேடைக்குச் சென்ற வேளையில் அங்கிருந்த நிர்வாகிகளிடையே திடீரெனச் சலசலப்பு ஏற்பட்டு வாக்குவாதம் உருவாகியுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றியதால் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மண்டபத்திலிருந்து வெளியேறினர். இந்த எதிர்பாராத மோதல் காரணமாக ஆலோசனைக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.