பேரறிவாளனை பார் கவுன்சிலில் இருந்து நீக்க காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன், வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கியுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சிறையில் இருந்த காலத்திலேயே சட்டப்படிப்பை முடித்த பேரறிவாளன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் விடுதலையான தனக்குத் தொழில் செய்ய உரிமை உண்டு என்ற அடிப்படையில் அவர் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டார்.

இந்நிலையில், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா, பேரறிவாளனை பார் கவுன்சிலில் இருந்து நீக்க வலியுறுத்தி மிக முக்கியமான தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்: குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு இந்தக் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.
"முன்னாள் பிரதமர் ஒருவரின் கொலையில் தண்டிக்கப்பட்டு, பின்னர் விடுதலையான ஒருவரை சட்டத்தை நிர்வகிக்கும் வழக்கறிஞர் பணியில் அனுமதிப்பது நீதித்துறையின் கண்ணியத்திற்கு அழகல்ல. பார் கவுன்சில் விதிகளை மறுஆய்வு செய்து அவரது பதிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சி "நீதித்துறையின் பின்னடைவு" என விமர்சித்து வந்த நிலையில், தற்போது அவர் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. பார் கவுன்சில் விதிகளின்படி, கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் வழக்கறிஞராகப் பதிவு செய்ய சில கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், பேரறிவாளன் தரப்பு இதனைச் சட்டரீதியாக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
