அடுத்த 30 வருஷத்துக்கு காங்கிரஸால் அதிகாரத்திற்கு வர முடியாது - அமித்ஷா விமர்சனம்!

 
அமித்ஷா

சர்வதேச மேடைகளில் இந்தியாவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் அதிகாரத்திற்கு வர முடியாது என்றும், இதே அரசியல் அணுகுமுறையைத் தொடர்ந்தால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு அந்தக் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாகச் சாடியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களையும், அங்கு அவர் எழுப்பும் குற்றச்சாட்டுகளையும் கடுமையாக விமர்சித்தார். "உலக நாடுகள் அனைத்தும் பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தையும் நாட்டின் வளர்ச்சியையும் பாராட்டி வரும் நிலையில், ராகுல் காந்தி வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவைப் பழித்துரைக்கிறார்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

அமித்ஷா

'பாரத்' என்று பெயரிடப்பட்ட மாநாடு ஒன்றில், உலகம் முழுவதிலுமிருந்து இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் அழைக்கப்பட்டு, இந்தியாவையும் பிரதமர் மோடியையும் விமர்சிப்பதற்கான மேடையாக அது பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ராகுல் காந்தி வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்துவிட்டு, நாட்டின் கிராமங்களுக்குச் சென்று மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமித்ஷா, காங்கிரஸ் தொண்டர்கள் இதே அரசியல் அணுகுமுறையுடன் தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு அக்கட்சியால் அதிகாரத்திற்கு வர முடியாது என்று கிண்டலடித்தார்.

அமித்ஷா அமித் ஷா

காங்கிரஸ் கட்சியின் 70 ஆண்டுகால ஆட்சிக் காலத்தையும், கடந்த 12 ஆண்டுகால பாஜக ஆட்சியையும் ஒப்பிட்டுப் பேசிய அமித்ஷா பல்வேறு வளர்ச்சிப் பணிகளைப் பட்டியலிட்டார். கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 76-லிருந்து 150 ஆக இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டில் புதிய தேசிய கல்விக் கொள்கை  வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் தனது 70 ஆண்டுகால ஆட்சியில் செய்யாத ஒன்றாக, விவசாயிகளின் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் வளர்ச்சிக்காகத் தனியாக ஒரு கூட்டுறவுத் துறை அமைச்சகத்தை நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது என்றார்.