ஆளுநருக்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!

 
தவெக தவெக

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை ஆதரவு குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அளித்த கோரிக்கையை ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் நிராகரித்துள்ளார். சிறிய கட்சிகளின் ஆதரவைக் கொண்டு ஆட்சி அமைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய ஆளுநர், ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் இந்தச் செயல் பாஜகவின் தூண்டுதலால் நடப்பதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சி போராட்டக் களத்தில் குதித்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சியை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கும் ஆளுநரின் போக்கைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்தப் போராட்டங்கள் தீவிரமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்த காங்கிரஸ், தற்போது ஆளுநருக்கு எதிராகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யத் தயாராகி வருகிறது.

தனிப்பெரும் கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்க முன்னுதாரணங்கள் இருந்தும், ஆளுநர் பிடிவாதம் காட்டுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என காங்கிரஸ் தலைவர்கள் சாடியுள்ளனர். சட்டமன்றத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்கத் தயாராக இருப்பதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டும் ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது. இந்த அரசியல் மோதலால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு நிலவும் சூழலில்,  இன்று  நடைபெறவுள்ள போராட்டமானது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.