வறுமையை வென்று நீட் தேர்ச்சி... முதல்வர் விஜய்க்கு மாணவி உருக்கமான வேண்டுகோள்!
மின்சாரம் கூட இல்லாத மலைக்கிராமத்தில் கடும் வறுமையிலும் விடாமுயற்சியுடன் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி ஒருவர், தனது மேல்படிப்புக்காக முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டைச் சேர்ந்த மலைவாழ் கிராமத்தில் கூலித் தொழிலாளியின் மகளாகப் பிறந்தவர் நிவேதா. அடிப்படை மின்சார வசதி கூட இல்லாத சூழலிலும், வறுமையைப் பொருட்படுத்தாமல் விளக்கு வெளிச்சத்தில் இரவு பகலாகப் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
"எங்கள் கிராமத்தில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் பலர் அவதிப்படுவதைக் கண்டிருக்கிறேன். அதனால் ஒரு சிறந்த மருத்துவராகி என் மக்களுக்கே சேவை செய்ய விரும்புகிறேன்" என நிவேதா நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தங்களின் ஏழ்மை நிலை மருத்துவக் கல்லூரிப் படிப்பிற்குத் தடையாக இருக்குமோ என்ற அச்சத்தில் மாணவி நிவேதா முதலமைச்சரின் உதவியை நாடியுள்ளார். தனது குடும்பச் சூழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்கி தனது மருத்துவக் கனவை நனவாக்க உதவ வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மின்சாரம் இல்லாத சூழலிலும் சாதித்துக் காட்டிய மாணவி நிவேதாவின் விடாமுயற்சியைப் பாராட்டி, அவருக்கு உரிய அரசு உதவி கிடைக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
