டிரம்ப்பைக் கொல்ல சதிதிட்டம்... வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிகளுடன் இளைஞர் கைது!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பைக் கொலை செய்யப்போவதாக மிரட்டிய நபர், வெள்ளை மாளிகைக்கு அருகே ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே, கடந்த வியாழக்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமான வகையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் படையினர், காரில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

அவர் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த 26 வயதான ரோனி யோர்ட்ரிக்ஸ் குவானிபா கிரினோஸ் என அடையாளம் காணப்பட்டார். விசாரணையின்போது, டிரம்ப்பைக் கொலை செய்ய வாஷிங்டனுக்கு வருமாறு தன் மனதில் குரல்கள் கேட்டதாக அவர் கூறியதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், அந்தக் கார் திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. காரைச் சோதனையிட்ட அதிகாரிகள், ஒரு துப்பாக்கி உள்ளிட்ட மூன்று துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, ஆயுதம் வைத்திருந்தது, திருடப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் தற்போது அமெரிக்க மார்ஷல்ஸ் சேவை காவலில் உள்ளார்.
