ரூ.1.50 கோடிக்கு வினாத்தாள் விற்பனை செய்யச் சதி.. ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று நடைபெறவிருந்த மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு(MAHA TET 2026), வினாத்தாள் கசிந்த அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் கசிவு தொடர்பாகப் பிவண்டி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பதுங்கியிருந்த வடமாநிலக் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரைத் தானே நகர்ப்புற போலீசார் கைது செய்துள்ளனர்.
தானே மாவட்டக் காவல்துறை மற்றும் மகாராஷ்டிர மாநிலத் தேர்வுக் கவுன்சிலுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: பிவண்டியின் கோன்காவ்ன் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அறையில், வெளியில் இருந்து வந்த சிலர் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளைப் பெரும் தொகைக்கு விற்பனை செய்ய முயல்வதாகத் தானே துணை ஆணையர் டாக்டர் பவன் பன்சோட்க்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

உடனே அங்கு விரைந்த போலீசார், அறையை சோதனை செய்தபோது அங்கு 4 செட் வினாத்தாள்களுடன் 3 பேர் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாகத் தேர்வுக் கவுன்சில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட தாள்கள் சரிபார்க்கப்பட்டன.
தேர்வுக் கவுன்சில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், இன்று தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்காகச் சீல் வைக்கப்பட்ட கட்டுகளில் இருந்த அசல் வினாத்தாள் கேள்விகளும், ஹோட்டல் அறையில் சிக்கிய கேள்விகளும் 100 சதவீதம் ஒன்றாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தேர்வின் வெளிப்படைத்தன்மையைக் காக்கும் பொருட்டு, தேர்வு தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு அவசரமாகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மகாராஷ்டிர அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மாநிலம் முழுவதும் சுமார் 1,028 மையங்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுதவிருந்த இந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால், தங்களது மையங்களுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

"தேர்வு ஒத்திவைக்கப்பட்டதில் மாணவர்களின் தவறு ஏதும் இல்லாததால், அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை; புதிய தேர்வுக்கான மறுபதிவுக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. புதிய தேர்வு தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்" எனத் தேர்வுக் கவுன்சில் துணை ஆணையர் பிரியா ஷிண்டே தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் பீகார் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ராஜீவ் குமார், ஆகாஷ் குமார் மற்றும் தீரஜ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வினாத்தாளை சுமார் ரூ. 1.5 கோடிக்கு விற்பனை செய்ய இவர்கள் திட்டமிட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வினாத்தாள் கசிவின் பின்னணியில் உள்ள முக்கியத் தலைவர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் தொடர்புகளைக் கண்டறியத் துணை ஆணையர் பவன் பன்சோட் தலைமையில் 20 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான 'மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்' கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
