தொகுதி மறுவரையறை மசோதா... டெல்லியில் ‘இண்டியா’ கூட்டணி அவசர ஆலோசனை - சரத் பவார் கட்சி புறக்கணிப்பு!
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் நவம்பர் 30-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிக்க, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று (நவம்பர் 28) ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் (அபிஷேக் பானர்ஜி), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு மசோதாவை எதிர்ப்பது குறித்த கூட்டு வியூகத்தை வகுத்தனர்.
அனைத்து மாநிலங்களுக்கும் சீரான முறையில் 50 சதவீத இடங்களை உயர்த்துவதாக இருந்தால் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்போம் என சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்த நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சி சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, மக்களவையின் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கையை மாற்றக் கூடாது, தற்போதைய இடங்களின் அடிப்படையிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதி ஒதுக்கீட்டை அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும் என 3 முக்கியக் கோரிக்கைகளை ‘இந்தியா’ கூட்டணி சார்பில் முன்வைத்துள்ளார்.
