அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் ஆணையம் உத்தரவு!
குண்டூசியில் துவங்கி வீட்டிலேயே பாம் செய்வது எப்படி? என்பது முதற்கொண்டு அமேசான், ஃப்ளிப்கார்ட் தளங்கள் உலகம் முழுவதும் இருந்தும் விதவிதமான பொருட்களை தினுசு தினுசான வண்ணங்களில், வடிவங்களில் வீட்டிற்கே கொண்டு வந்து தருகின்றன. இதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்பது தான் துயரம்.
மாட்டு சாணம் துவங்கி, கங்கை நீர் வரையில் நுகர்வோர் என்ன கேட்டாலும் அத்தனையும் காசு தான். அது பாதுகாப்பானதா? சட்டப்பூர்வமான விற்பனையா? என்பதை எல்லாம் யாரும் ஆராய்வதில்லை. இந்நிலையில் தான் இந்திய இ-காமர்ஸ் சந்தையில் முன்னணி நிறுவனங்களாக விளங்கும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகியவை அரசு விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதன் காரணமாகக் கடுமையான அபராதத்தைச் சந்தித்துள்ளன. அரசிடம் முறையாகப் பதிவு செய்யப்படாத வேளாண் ரசாயனப் பொருளைத் தங்களது ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசிடம் முறையாகப் பதிவு செய்யப்படாத 'சைக்ளோசினோன் களைக்கொல்லி' என்ற வேளாண் ரசாயனப் பொருளைத் தளங்களில் விற்பனை செய்ததற்கும் விளம்பரப்படுத்தியதற்கும், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்குத் தலா 10 இலட்சம் ரூபாயும், ஜியோமார்ட் நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாயும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 22 தேதியிட்ட தனி உத்தரவில், அந்தத் தயாரிப்பின் செயல்திறன் மிக்க மூலப்பொருளின் வேதியியல் பெயரையோ அல்லது அதன் சரியான கலவையையோ வெளியிடாமல் விற்பனை செய்யப்பட்டது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தால் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, அந்த மூன்று மின்வணிக நிறுவனங்களும் சம்பந்தப்பட்ட பொருளின் விற்பனையையும் விளம்பரத்தையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோர் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் தயாரிப்புகளைத் தங்களது தளங்களில் இருந்து தடுத்து நிறுத்தச் சுய தணிக்கை மேற்கொள்ளவும், இது தொடர்பான அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
