பைபாஸ் சாலையில் கண்டெய்னர் லாரிகள் மோதி விபத்து: ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்பு!

 
கண்டெய்னர் லாரி மோதி விபத்து

தூத்துக்குடியில் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், இடிபாடுகளில் சிக்கிப் படுகாயமடைந்த ஓட்டுநரைத் தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தூத்துக்குடி பைபாஸ் சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் தனியார் நிறுவனத்தின் கண்டெய்னர் லாரியைக் கணேசன் (39) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது, சாலையில் பழைய காகிதக் கட்டுகள் ஏற்றப்பட்டு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக இவருடைய லாரி பலமாக மோதியது.

விபத்து

இந்த கோர விபத்தில் லாரியின் முன்பக்க கேபின் பகுதி முழுமையாக நொறுங்கியதுடன், ஓட்டுநர் கணேசன் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்தார். தகவலறிந்து விரைந்து வந்த சிப்காட் தீயணைப்பு நிலைய அதிகாரி கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள், தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு அவரைப் பத்திரமாக மீட்டனர்.

விபத்தில் வலது காலில் எலும்பு முறிவு மற்றும் தோள்பட்டை, முகத்தில் காயமடைந்த கணேசன், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சாலையில் லாரியைப் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைத்திருந்த மற்றொரு லாரி ஓட்டுநரான குணசேகரன் (46) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.