தங்கம், வெள்ளி விலை தொடர் சரிவு; சர்வதேச சந்தையில் கடும் வீழ்ச்சி - மேலும் குறைய வாய்ப்பு!

 
தங்கம் தங்கத்தின்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இதன் தாக்கமாக உள்நாட்டு நகைச் சந்தையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார மற்றும் வர்த்தகத் துறை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 157 டாலர் குறைந்து 3,526 டாலராக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் 3 டாலர் சரிந்து ஒரு அவுன்ஸ் 41 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

உலகளாவிய நாணயச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்திலிருந்து லாபத்தை எடுப்பது மற்றும் வட்டி விகிதக் கொள்கைகள் குறித்த எதிர்பார்ப்புகள் ஆகியவை சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளைத் தொடர்ந்து கீழே இழுத்து வருகின்றன.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வந்து, தற்போது ஒரு சவரன் (8 கிராம்) ₹92,080 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது (22 காரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ₹11,510 அளவில் உள்ளது).

சர்வதேசச் சந்தையில் ஒரே நாளில் தங்கம் 157 டாலர் வரை சரிந்திருப்பதால், அதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக நேரத்தில் சென்னையிலும் நகை விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாகத் துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கம்

கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, நவம்பர் மாதத்தில் தொடர் சரிவைச் சந்தித்து சவரன் ₹1 லட்சத்திற்கும் கீழே இறங்கி, தற்போது ₹92,000-ஐ ஒட்டி நிற்பது திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சுபமுகூர்த்தங்களுக்காக நகை வாங்கக் காத்திருந்த குடும்பங்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.

விலை சரிவு தொடர்ந்து நீடிக்குமா அல்லது குறிப்பிட்ட அளவில் நிலைபெற்று மீண்டும் ஏற்றம் காணுமா என்பதைக் கண்காணித்து, நகைப் பிரியர்களும் சிறு முதலீட்டாளர்களும் தங்களது கொள்முதல் திட்டங்களைச் சீரமைத்து வருகின்றனர்.