நள்ளிரவுகளில் தொடர் மின்வெட்டு.. 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விடிய விடியச் சாலை மறியல்!
சென்னையின் புறநகர்ப் பகுதியான ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
ஆவடி பகுதியில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் கடும் புழுக்கம் மற்றும் கொசுத்தொல்லை காரணமாகக் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் தூக்கமின்றி அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம், காலை 7.30 மணி வரை சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், விடியற்காலையிலேயே வீடுகளை விட்டு வெளியேறி ஆவடியில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை நோக்கித் திரண்டனர்.
மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், அங்கு இரவுப் பணியில் இருந்த அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையான பதில் கிடைக்காததால், ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திரண்டு ஆவடி - பூந்தமல்லி பிரதான நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
மின்வாரிய நிர்வாகத்திற்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு அவர்கள் சாலையில் அமர்ந்ததால், அந்தப் பகுதியில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலையில் வேலைக்குச் சென்றவர்கள் மற்றும் அத்தியாவசிய வாகனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, பழுதடைந்த மின்மாற்றிகளை உடனடியாகச் சீரமைக்க அறிவுறுத்தினர்.
"இனிமேல் நள்ளிரவு நேரங்களில் இது போன்ற தொடர் மின்வெட்டு ஏற்படாது, தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். அதன் பின்னரே ஆவடி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மெதுவாகச் சீரடைந்தது.
