தொடர் மழை... மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் பாறை... வாகன ஓட்டிகள் அச்சம்!

 
நீலகிரி குன்னூர் மண் சரிவு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவைத் தொடர்ந்து, 30 அடி உயரத்தில் ஆபத்தான நிலையில் பாறை ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குன்னூர் அருகே உள்ள பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட முத்திரி எஸ்டேட் பகுதியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் நல நிதி ஒதுக்கீட்டின் கீழ் கடந்த 2021-22-ஆம் ஆண்டில் ரூ.27.65 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

முத்திரி எஸ்டேட் முதல் இந்திரா நகர் பழங்குடியினர் குடியிருப்பு வரை செல்லக்கூடிய இந்தச் சிமெண்ட் சாலையைப் பயன்படுத்தி, இந்திரா நகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

நீலகிரி கனமழை மரம் விழுந்து

சமீபத்தில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, இந்தச் சாலையின் மேல்பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் விழுந்த மண் மற்றும் சிறிய பாறைகளைச் சீரமைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.

மண் சரிவு சரி செய்யப்பட்ட போதிலும், சரிவு ஏற்பட்ட இடத்தில் சுமார் 30 அடி உயரத்தில் மிகப்பெரிய பாறை ஒன்று எந்நேரமும் கீழே விழும் ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் பாதையைப் பயன்படுத்தும் பழங்குடியின மக்களும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் உயிருக்குப் பயந்தபடியே அவ்வழியைக் கடந்து சென்று வருகின்றனர்.

ரெட் அலர்ட் கொடைக்கானல் நீலகிரி கனமழை

நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பொழியும் வாய்ப்பு உள்ளதால், மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு அந்தப் பாறை கீழே உருண்டு விழுந்தால் பெரிய அளவிலான விபத்து நேரிடும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாறை தொங்கும் பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், உடனடியாக அந்தப் பாறையை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்றும், மண் சரிவு ஏற்பட்ட மலைப்பகுதியில் பலமான தடுப்புச்சுவர் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளை விரைந்து கட்டித் தர வேண்டும் என்றும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.