சபரிமலையில் 30 வருடங்களாக தொடர் பாதுகாப்புப் பணி... சைபர் விழிப்புணர்விலும் சாதனை படைக்கும் போலீஸ் அதிகாரி ஹரிபிரசாத்!

 
சபரிமலை ஹரிபிரசாத்

சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு சீசன் காலங்களில் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் கேரள காவல்துறை அதிகாரி ஹரிபிரசாத், சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பணிகளிலும் கவனம் ஈர்த்து வருகிறார். ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றுள்ள அவரது சேவைப் பயணம் குறித்துப் பார்ப்போம்.

கேரள மாநிலம் கண்ணூர் அஞ்சரக்கண்டியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (56), கடந்த 1993-ஆம் ஆண்டு கேரள காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது கண்ணூர் மாங்காட்டுபரம்பில் ஆயுதப்படை 4-ஆம் படைப் பிரிவில் உதவி கமாண்டராகப் பணியாற்றி வருகிறார்.

சபரிமலை

சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசன் காலங்களில் கடந்த 30 ஆண்டுகளாகச் சன்னிதானம், பதினெட்டாம் படி, மாளிகப்புரம், மரக்கூட்டம், பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாகப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு பக்தர்களுக்குச் சேவையாற்றி வருகிறார்.

சீசன் காலங்கள் தவிர மற்ற நாட்களில், அன்றாடப் பணிகளுடன் மாநிலம் முழுவதும் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை அவர் நடத்தி வருகிறார். இதுவரை 650 கருத்தரங்குகளை நடத்தியுள்ள அவர், சைபர் குற்றங்களில் சிக்கி மனதளவில் பாதிக்கப்பட்ட 428 மாணவ - மாணவிகளை இயல்பு நிலைக்கு மீட்டுள்ளார்.

சபரிமலை

தனது சிறப்பான பணிகளுக்காக ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம், முதலமைச்சரின் போலீஸ் பதக்கம் மற்றும் மத்திய உள்துறை, கேரள காவல்துறையின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், 75-ஆம் சுதந்திர தினத்தையொட்டி மத்திய உள்துறை நடத்திய சைபர் வினாடி-வினா போட்டியில் மாநில அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் 5-ஆம் இடத்தையும் பிடித்துள்ளார்.