குற்றங்கள் குறையக் காவல் நிலையத்திலேயே கிடாவெட்டி மாந்திரீக பூஜை - போலீசாரின் செயலால் சர்ச்சை!

 
சேலம் தீவட்டிப்பட்டி காவல் நிலையம்

 

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் அப்பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகக் காவல் துறையினரே நேரடியாகக் கிடாவெட்டி, மாந்திரீக பூஜை நடத்தியதாக வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தின் தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகக் கொலை, கொள்ளை மற்றும் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்கும் நோக்கில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே காவல் நிலைய வளாகத்திற்குள்  மாந்திரீகப் பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பூஜையின் ஒரு பகுதியாகக் காவல் நிலையத்திலேயே கிடாவெட்டி பலி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பலியிடப்பட்ட அந்தக் கிடாயின் ரத்தத்தைக் காவல் நிலையக் கட்டடத்தின் நான்கு மூலைகளிலும் தீய சக்திகள் அண்டாமல் இருப்பதற்காகப் பூசியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பூஜை முடிவடைந்த பின்னர், வெட்டப்பட்ட கிடாயின் இறைச்சியைக் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு எடுத்துச் சென்று, அங்குச் சமைத்துக் காவல் துறையினர் உணவாக உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது:

பகுத்தறிவு மற்றும் சட்டத்தின்படி இயங்க வேண்டிய காவல் துறை அதிகாரிகள், மூடநம்பிக்கையின் உச்சமாகத் தங்களின் அலுவலகத்திலேயே மாந்திரீகப் பூஜைகளை நடத்தியுள்ள விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்நாட்களில், குற்றங்களைத் தடுக்கப் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்துவதையும், நவீனப் புலனாய்வுகளை மேற்கொள்வதையும் விடுத்து, காவல் துறையினரே இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருப்பது குறித்துச் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உரியத் துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் தற்பொழுது கோரிக்கை விடுத்துள்ளனர்.