அதிமுகவில் மீண்டும் சர்ச்சை... இபிஎஸ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன்!
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் அமைப்பு ரீதியிலான 84 மாவட்ட செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பல்வேறு கட்சி சார்ந்த விவகாரங்கள் குறித்து விவாதித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற 2 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்விக்கான காரணங்கள் குறித்துக் கூட்டத்தில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதிமுகவின் முக்கிய மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.

சமீபகாலமாக இபிஎஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த மூத்த தலைவர்கள் இக்கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது, அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசலையும் அதிருப்தியையும் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
