கோவையில் சர்ச்சை... விஜய் செல்வதால் அவசர அவசரமாக ‘நான் முதல்வன்’ வாசகம் மறைப்பு!
இன்று காலை கோவையில் அமைக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் விஜய் கோவை செல்லும் நிலையில், முதல்வரின் வருகையை முன்னிட்டு, அங்கு ஏற்கனவே சுவர்களில் இடம்பெற்றிருந்த ‘நான் முதல்வன்’ என்ற அரசுத் திட்டத்தின் வாசகம் அவசர அவசரமாக மறைக்கப்பட்டுள்ளது தற்போது பெரும் சர்ச்சையையும் அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. மாநில முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் கலந்துகொண்டு இந்த நவீன அறிவியல், அறிவுசார் மையத்தை பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்க உள்ளார்.
இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சில திடீர் மாற்றங்கள் கவனத்தை ஈர்த்து, விவாதங்களைக் கிளப்பியுள்ளன.
கட்டிடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அரங்கில், மாணவர்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள கணினி மேஜை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் முந்தைய அரசுத் திட்டத்தின் அடையாளமாக ‘நான் முதல்வன்’ என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் வருகையை ஒட்டி திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டபோது, அந்த இடத்தில் இடம்பெற்றிருந்த ‘நான் முதல்வன்’ வாசகம் மட்டும் அவசரமாக மறைக்கப்பட்டுள்ளது.
அரசு விழாக்களில் முந்தைய ஆட்சியின் திட்டப் பெயர்களை மாற்றவோ அல்லது மறைக்கவோ முயற்சிகள் நடப்பதாகக் கூறி திமுகவினர் இதற்குத் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். திறப்பு விழாவுக்கு முந்தைய நாளிலேயே இந்த விவகாரம் கோவை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
