காலை உணவு திட்டத்தில் அடுத்தடுத்து சர்ச்சை... உணவின் தரத்தை ஆசிரியர்கள் பரிசோதித்த பிறகே வழங்க கல்வித்துறை உத்தரவு!

 
மருத்துவமனை

நேற்று முன் தினம் செங்கல்பட்டு மாவட்டம், நேற்று திருவள்ளூர், இன்று நாமக்கல் மாவட்டம் என்று அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் தொடர்ந்து 3வது நாளாக உடல்நலக் குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் தரத்தை உறுதி செய்யும் வகையில், உணவு பரிமாறுவதற்கு முன்பு ஆசிரியர்கள் அதனைச் பரிசோதித்து வழங்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்குச் சுவையான மற்றும் சத்தான காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

காலை உணவு

சமைக்கப்பட்ட உணவு மாணவர்களுக்குப் பரிமாறப்படுவதற்கு முன்னதாக, அது அவர்களின் உடல்நலத்திற்கு உகந்த தரமான உணவுதானா என்பதை ஆசிரியர்கள் தாங்களே நேரில் சுவைத்து உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறும் முழுப் பணியையும் அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியர்கள் சுழற்சி முறையில் தினமும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

மருத்துவமனை வாந்தி மயக்கம் மாணவர்கள்

சமையலறைகளில் சமையல் பொருட்கள் மட்டுமே இருக்க வேண்டும்; மற்ற பொருட்கள் எதையும் அங்கு வைக்கக் கூடாது. மேலும், சமையலறையை எப்போது புகை, தூசி மற்றும் நூலாம்படை இல்லாமல் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

சமையல் செய்யும் பாத்திரங்கள் மற்றும் உணவைப் பரிமாறும் பாத்திரங்களை உபயோகிப்பதற்கு முன்பும் பின்பும் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து வைக்க வேண்டும். சமைத்த உணவை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும் மற்றும் உணவுப் பரிமாற்றத்தின் போதும் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.