‘விசில்’ சின்னத்துக்கு வாக்களிக்க கூறி குக்கர் விநியோகம் - திருச்செந்தூரில் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) உத்தேச வேட்பாளர் எனப் பேசப்படும் ஜெ.கே.ஆர். முருகன் தரப்பினர், வாக்காளர்களுக்குக் குக்கர் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை விநியோகித்து வருவதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபரான ஜெ.கே.ஆர். முருகன் என்பவர் திருச்செந்தூர் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது. தன்னிடம் பணிபுரியும் நபர்களைக் கொண்டு தொகுதி முழுவதும் 'விசில்' சின்னம் மற்றும் தனது பெயர் பொறித்த ஸ்டிக்கர் ஒட்டிய குக்கர், கடலை மிட்டாய், மற்றும் கட்சி பார்டர் கொண்ட துண்டுகளை விநியோகித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக உடன்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் இந்தப் பரிசுப் பொருட்கள் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டு, பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

முதலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைக் குறிவைத்துச் செயல்பட்ட ஜெ.கே.ஆர். முருகன், அங்கு நிலவிய கட்சி உள்விவகாரங்கள் காரணமாகத் தனது கவனத்தைத் திருச்செந்தூர் பக்கம் திருப்பியுள்ளார். இவருக்கு மட்டும் நேர்காணல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானதால், அதே தொகுதியில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த மற்ற தவெக நிர்வாகிகள் விரக்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் பார்வையாளர்களின் கண்காணிப்பைத் மீறி, இத்தகைய வெகுமதிகள் வழங்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும், இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள த.வெ.க-வினர் மற்றும் அதற்கு மூளையாகச் செயல்படும் ஜெ.கே.ஆர். முருகன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
