குன்னூரில் கொட்டிய கனமழை! கார் மீது விழுந்த பாறை - ஒருவர் பலி, மனைவி படுகாயம்!

 
விபத்து

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கனமழைக்கு இடையே மலைப்பாதையில் சென்ற கார் மீது பாறை உருண்டு விழுந்ததில் ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் மலைப்பாதைகளில் ஆங்காங்கே மரங்கள் விழுவதுடன், மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், குன்னூர் அருகே அருவங்காடு ஜெகதளா பகுதியைச் சேர்ந்த பெள்ளியின் மகன் கிருஷ்ணமூர்த்தி (65), அவரது மனைவி தேவகி (54), மகன் கார்த்தி (29) மற்றும் உறவினர்கள் இந்திரா (68), சிந்தாமணி (62) ஆகியோர் காரில் கோவைக்கு சென்றுள்ளனர்.

Himachal Pradesh: Rockfall from hill crushes tourist car in Mandi, woman dead, two injured - India TV News

பின்னர் அவர்கள் கோவையில் இருந்து மீண்டும் குன்னூர் நோக்கி வந்துள்ளனர். மேட்டுப்பாளையம்–குன்னூர் மலைப்பாதையில் பர்லியார் கீழ்ப்பகுதியில் இன்று காலை கார் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்து காரின் பின்பகுதியில் விழுந்தது.

இதில் காரின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி தேவகி ஆகியோர் படுகாயமடைந்தனர். சம்பவத்தை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக அவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு கிருஷ்ணமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த தேவகி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.குன்னூர்–மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாலையோரங்களில் உள்ள பாறைகள் மற்றும் மரங்கள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மண் சரிவு, மரங்கள் விழுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.