தங்க நகைக்கடன் இனி ரூ.10,000 வரை ! கூட்டுறவு வங்கிகளில் புதிய அறிவிப்பு!

 
கோல்டு லோன்

 

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் தங்க நகைக்கடனுக்கான அதிகபட்ச தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இனி ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை நகைக்கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் தங்க நகைக்கடனும் முக்கியமானதாக உள்ளது.

தங்கம்

தற்போது தங்கத்தின் சந்தை விலை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் நகைக்கடன் தொகையையும் உயர்த்தி கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 அல்லது அந்த தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த தொகையே கடனாக வழங்கப்படும்.இதன் மூலம் முன்பு வழங்கப்பட்டு வந்த தொகையைவிட, தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால், மருத்துவச் செலவு, கல்விச் செலவு, தொழில் தேவைகள் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காக நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டி மற்றும் எளிதான நடைமுறைகள் இருப்பதால், கிராமப்புற மக்கள் உள்ளிட்ட பலரும் நகைக்கடனை பயன்படுத்தி வருகின்றனர்.

தங்கம் தங்கத்தின்

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக்கடன் அளவு தங்கத்தின் சந்தை மதிப்புடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொரு நகைக்கும் கிடைக்கும் கடன் தொகை அதன் மதிப்பு மற்றும் பொருந்தும் விதிமுறைகளின் அடிப்படையில் மாறுபடலாம்.எனவே, ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 என்பது அதிகபட்ச வரம்பு மட்டுமே. அனைவருக்கும் கட்டாயமாக ஒரு கிராமுக்கு ரூ.10,000 கிடைக்கும் என்று பொருள் கொள்ளக்கூடாது. சந்தை மதிப்பில் 75 சதவீதம் என்ற வரம்பும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

தங்கத்தின் விலை உயர்ந்து வரும் சூழலில் கூட்டுறவு நிறுவனங்களின் இந்த புதிய நகைக்கடன் வரம்பு, அவசர நிதித் தேவைக்காக தங்கத்தை அடமானம் வைக்க நினைப்பவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.