கூட்டுறவு வங்கிகளில் ரூ.30 லட்சம் வரை நீண்டகாலக் கடன்! சிறப்பு முகாம்கள் அறிவிப்பு
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் நீண்டகாலக் கடன்கள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எட்டும் வகையில், வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்கள் நடத்தப்படுகின்றன.
எந்தெந்த பணிகளுக்கு கடன் கிடைக்கும்?
இந்த முகாம்களில் கூடுதலாக ரூ.50 கோடி மதிப்பிலான நீண்டகாலக் கடன்கள் வழங்கப்பட உள்ளன. விவசாய இயந்திரங்கள் வாங்குதல், குளிர்பதனக் கிடங்குகள் அமைத்தல், கறவை மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் அறுவடைக்குப் பிந்தைய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்குக் கடன் பெறலாம். தகுதியுடைய உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
விண்ணப்பதாரர்கள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் (PCARDB) நடைபெறும் முகாம்களில் பங்கேற்கலாம். விண்ணப்பத்துடன் புகைப்படம், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, கேஒய்சி ஆவணங்கள் மற்றும் நில அடமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9884000845 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
