திரையரங்க கழிவறையில் காவலர் மயங்கி விழுந்து மரணம்!
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே திரையரங்கிற்குத் திரைப்படம் பார்க்க வந்த காவலர் ஒருவர், கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவில் உள்ள ஜீனத் திரையரங்கிற்கு, காவலர் ஸ்வாபேஸ் சிவதாஸ் என்பவர் இன்று காலை 9 மணியளவில் திரைப்படம் பார்க்க வந்துள்ளார். அப்போது திரையரங்கக் கழிவறைக்குச் சென்றவருக்குத் திடீரென கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அங்கே மயங்கி விழுந்து சுருண்டு களத்திலேயே உயிரிழந்தார்.
திரையரங்கிற்கு மிக அருகிலேயே மருத்துவமனை அமைந்திருந்த போதிலும், அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் ஏற்பட்ட காலதாமதமே உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி ஆலுவா மாவட்ட அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரது மாரடைப்பு அல்லது உடல்நலக் குறைவிற்கான காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
