மல்லி கிலோ ரூ.3,000, பிச்சிப்பூ ரூ.2,000 நாளை வளர்பிறை கடைசி முகூர்த்தம்... பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!
இன்று உலகம் முழுவதும் மலையாளம் பேசுபவர்கள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். நாளை ஆவணி மாதத்தின் கடைசி வளர்பிறை முகூர்த்த தினம். இதையடுத்து தமிழகத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கேரளம் மட்டும்மல்லாமல் தமிழகத்திலும் பரவலாக ஓணம் பண்டிகையை பெரும்பாலான மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக கேரளத்தின் எல்லையில் உள்ள நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் அதிகளவில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஓணத்தை முன்னிட்டு பூக்கள் விலை இரு மடங்கு உயர்ந்தன.

கேரள மாநிலத்தின் முதன்மையான பண்டிகையான ஓணம் இன்று செப்டம்பர் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பால் கேரளாவில் வழக்கத்தைவிட எளிமையான முறையில் ஓணத்தை கொண்டாட அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் கேரளா, மற்றும் கேரள மாநிலத்தை ஓட்டியுள்ள தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஓணம் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலும், நாகர்கோவில் பகுதிகளிலும் மலையாளம் பேசும் மக்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாகவே களியக்காவிளை, மார்த்தாண்டம், குலசேகரம், திற்பரப்பு, தக்கலை, பத்மநாபபுரம், அருமனை, கருங்கல் உள்ளிட்ட மாவட்டத்தின் பரவலான இடங்களில் ஓணம் ஊஞ்சல் கட்டியும், அத்தப்பூ கோலமிட்டும் ஓணத்தை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளுக்கு ஓணம் நாளில் விடுமுறை என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன. பள்ளி குழந்தைகளும், கல்லூரி மாணவ - மாணவியரும் அத்தப்பூ கோலமிட்டு ஓணத்தை கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர்.

ஓணத்தை முன்னிட்டு அத்தப்பூ கோலத்திற்கும், ஓணம் அலங்காரத்திற்கான பூக்களையும் வாங்க தோவாளை மலர் சந்தையில் மக்கள் அதிகளவில் கூடினர். அதே சமயம் கேரளாவில் இருந்து வழக்கத்தை விட குறைவான வியாபாரிகளே பூக்களை வாங்க வந்திருந்தனர். தேவை அதிகமாக இருந்ததால் பூக்களின் விலை இரட்டிப்பானது. மல்லிகை பூ கிலோ ரூ.3,000-க்கு விற்பனையானது. பிச்சிப்பூ ரூ.2,000, கிரேந்தி ரூ.60, கோழிக்கொண்டை ரூ.60, வாடாமல்லி ரூ.200, தாமரை ஒன்று ரூ.10, மரிக்கொழுந்து ரூ.140, செவ்வந்தி ரூ.190-க்கு விற்பனை ஆனது. அத்தப்பூ கோலத்திற்கு தேவையான வாடாமல்லி, கோழிக்கொண்டை, கிரேந்தி போன்ற பூக்களை மக்கள் அதிகமாக வாங்கிச் சென்றனர். தோவாளை மலர் சந்தையில் நேற்று வழக்கத்தை விட கூடுதலாக 150 டன் பூக்கள் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
