தமிழகத்தில் பரவும் கொரோனா... சுகாதாரத் துறை விளக்கம்!

 
கொரோனா

ஆந்திர மாநிலத்தில் பரவி வரும் கொரோனா தொற்றால் அண்மையில் 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் சிலர் தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் என்ற செய்தி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வகை குறித்தும், பொதுமக்களின் அச்சம் குறித்தும் தமிழக அரசு முக்கிய விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் கண்டறியப்படும் கொரோனா வைரஸ் எந்த மாதிரியான வகையைச் சேர்ந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறியத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன: தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அமைந்துள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த ஆய்வக முடிவுகளின்படி, தற்போது நாடு முழுவதும், குறிப்பாக ஆந்திராவிலும் பரவி வருவது ஒமைக்ரானின் 'ஆர்.எஃப். 5' (RF.5) உருமாறிய வகை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,  தமிழகத்தில் தீவிர நீரிழிவு நோய் மற்றும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழக்கமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அவை மிகவும் வீரியம் குறைந்த பாதிப்பாகவே உள்ளன.

தற்போது கண்டறியப்பட்டுள்ள ஆர்.எஃப். 5 வகையானது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தாத வீரியமற்ற உருமாறிய வகையைச் சார்ந்தது. பொதுமக்களுக்கு இதன் மூலம் பெரிய அளவில் ஆபத்து ஏதுமில்லை என்பதால், கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், சமூக அளவில் அது தீவிரப் பரவலாக இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.