"ஊழல் கூடாரமாக மாறிவிட்டது" - திமுகவிலிருந்து அயலக அணி இணைச் செயலாளர் புகழ் காந்தி விலகல்!
திமுக அயலக அணியின் இணைச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான புகழ் காந்தி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தனது விலகல் தொடர்பான கடிதத்தைக் கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அவர் சமர்ப்பித்துள்ளார்.
தனது விலகல் கடிதத்தில் திமுக தலைமை மற்றும் கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்: திமுக தற்போது முழுமையாக ஊழல் கூடாரமாகவும், ஒரு சில தனிநபர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சர்வாதிகார அமைப்பாகவும் மாறிவிட்டதாகக் சாடியுள்ளார்.
கட்சிக்குள் உண்மையாக உழைக்கும் திறமையான இளைஞர்களுக்கு உரிய அங்கீகாரமோ, வாய்ப்புகளோ, இடமோ அளிக்கப்படுவதில்லை என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அரசியல் களத்தில் நிலவும் தற்போதைய சூழல்களுக்கு இடையே, அயலக அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர் பொறுப்பிலிருந்து விலகி தலைமையை நோக்கி இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
