வாக்கு எண்ணிக்கை தொடங்கியது... அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் காரில் இருந்த கட்சிக் கொடி அகற்றம்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்த மதுராந்தகம் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தின் காரில் பொருத்தப்பட்டிருந்த கட்சிக் கொடி காவல்துறையினரால் அகற்றப்பட்டது. தேர்தல் விதிமுறைகளின்படி வாக்கு எண்ணும் மைய வளாகத்திற்குள் கட்சிக் கொடிகள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களைத் தவிர வேறு எதையும் முகவர்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறி கொண்டுவரப்படும் பொருள்கள் உடனுக்குடன் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
தவெக, திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் முன்னணித் தலைவர்களும், முகவர்களும் வாக்கு எண்ணும் மையங்களில் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் அடுத்தடுத்த சுற்று முடிவுகள் விரைவில் வெளியாகும்.
