நாளை வாக்கு எண்ணிக்கை... மதுராந்தகம், தாராபுரத்தில் ஜெயிக்கப் போவது யாரு? - எகிறும் எதிர்பார்ப்பு!

 
இடைத்தேர்தல்

தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் செயல்பாடுகளை எடைபோடும் வகையில் பார்க்கப்படும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் 85.97% வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 80.31% வாக்குகளும் பதிவாகின. பொதுத்தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குப்பதிவு சற்று சரிந்துள்ளது அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் விசில் பிரச்சாரம்

இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, தவெக மற்றும் அதிமுக இடையே நேரடிப் போட்டி போன்ற சூழல் உருவாகியுள்ளது.

நாளை காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதிலிருந்து வெளிவரும் முடிவுகளைக் கொண்டே ஆரம்ப கட்ட முன்னணி நிலவரங்கள் தெரியவரும்.

விஜய் பிரச்சாரம்

தவெக அரசு பதவியேற்று சில மாதங்களே ஆன நிலையில் நடக்கும் இந்தத் தேர்தல் முடிவு, ஆளுங்கட்சிக்கு ஒரு முக்கியமான சோதனையாகவும், எதிர்க்கட்சிகளுக்குப் பலம் சேர்க்கும் மைல்கல்லாகவும் பார்க்கப்படுவதால் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

நாளை வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளிவரும்போது எந்தக் கட்சி தங்களது கோட்டையைத் தக்கவைக்கப் போகிறது என்பது தெரியவரும்.