நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதல் ஜோடி தற்கொலை - கதறும் உறவினர்கள்!
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், காதல் ஜோடி தற்கொலைச் செய்துக் கொண்டது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சாய்குமார் (22) மற்றும் ஸ்ருதி (20) என்ற காதல் ஜோடிக்கு, இரு வீட்டாரின் சம்மதத்துடன் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பாக ஓரளவு பணம் சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உன்னத நோக்கில் இவர்கள் செயல்பட்டனர். இதற்காகச் சாய்குமார் வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்குச் சென்று கடினமாக உழைத்து வந்துள்ளார்.

வெளிநாட்டில் பணியாற்றி வந்த சாய்குமாருக்கு திடீரென கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், வேறு வழியின்றி அங்கேயே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் துயரச் செய்தி சாய்குமாரின் குடும்பத்தினருக்கும், அவரது வருங்கால மனைவி ஸ்ருதிக்கும் பேரிடியாக அமைந்தது.

தனது காதலனின் மரணச் செய்தியைக் கேட்டு நிலைகுலைந்து போன ஸ்ருதி, மிகுந்த வேதனையில் ஆழ்ந்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஸ்ருதியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நிச்சயதார்த்தம் முடிந்து திருமணக் கனவில் இருந்த காதல் ஜோடி, அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
