சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபோது ரயில் மோதி தம்பதி உயிரிழப்பு!

 
தம்பதி

ஆரணி அருகே ரயில் நிலையத்தைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக ரயில் மோதி தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் ரயில் நிலையப் பகுதியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் சந்திரகுமார் மற்றும் அவரது மனைவி சிந்து என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கணவர் சந்திரகுமாருக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த நுரையீரல் பாதிப்பிற்காக, வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு இருவரும் வழக்கமான சிகிச்சைக்காகச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை முடித்துக் கொண்டு, மீண்டும் தங்களது ஊருக்குத் திரும்புவதற்காக வடமாதிமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளனர்.

பள்ளி மானவி தற்கொலை

ரயில் நிலையத்திலிருந்து அவர்கள் வெளியேற தண்டவாளத்தைக் கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த ரயில் ஒன்று, எதிர்பாராதவிதமாகச் சந்திரகுமார் - சிந்து தம்பதி மீது பயங்கரமாக மோதியது. இந்தக் கொடூர விபத்தில் தூக்கி வீசப்பட்ட தம்பதியினர் இருவரும் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தனர்.

இவ்விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், காட்பாடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்துக் காட்பாடி ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சை பெற்றுத் திரும்பிய தம்பதி ரயில் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.