ஓட்டுநருக்கு மாரடைப்பு - பேருந்து மீது கார் மோதி தம்பதி பலி!

 
பேருந்து விபத்து பேருந்து விபத்து

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில், காரை ஓட்டிச் சென்ற முதியவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் நிகழ்ந்த விபத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுடன் சென்ற பேத்திகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

வேப்பம்பட்டு பாலாஜி நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (65) மற்றும் அவரது மனைவி கீதா (56) ஆகியோர், இன்று காலை தங்களது பேத்திகளுடன் திருவள்ளூரில் உள்ள ஒரு கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்யக் காரில் புறப்பட்டுள்ளனர். காரை ரவிச்சந்திரன் ஓட்டிச் சென்றுள்ளார்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

செவ்வாப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, ரவிச்சந்திரனுக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நிலைகுலைந்த அவர், காரின் கட்டுப்பாட்டை இழந்தார். தாறுமாறாக ஓடிய கார், எதிரே வந்த அரசுப் பேருந்து மீது பலமாக மோதி நொறுங்கியது.

இந்தக் கொடூர விபத்தில் காரை ஓட்டிய ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது மனைவி கீதா, ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து

காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவர்களது பேத்திகள் இருவரும், சிறிய காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பினர். விபத்து குறித்துத் தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் அலமேலு தலைமையிலான போலீசார், உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்து நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகிழ்ச்சியாகக் கோவிலுக்குப் புறப்பட்ட குடும்பத்தில் நேர்ந்த இந்த உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.