கர்ப்பிணியைக் கொன்று மின்விசிறியில் தலைகீழாகத் தொங்கவிட்ட தம்பதி - கூடுவாஞ்சேரியில் கொடூரம்!
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் கர்ப்பிணிப் பெண் ஹயாத் நிஷா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு இரயில் மூலம் ஆக்ராவுக்கு அனுப்பப்பட்ட வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக்கொலைத் தொடர்பாகவும் உடல் பாகங்களைச் சூட்கேஸில் அடைத்து இரயில் மூலம் டெல்லி நோக்கி அனுப்பியது தொடர்பாகவும் அஸ்ஸாம் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த மாணிக் உதின் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி என்ற தம்பதியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ஹயாத் நிஷா தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், ஆத்திரமடைந்த இந்தத் தம்பதி அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளனர். ஹயாத் நிஷா தூங்கும்போது முகத்தில் மயக்க மருந்து தெளித்து அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலிலிருந்து வெளியேறும் ரத்தம் தரைமீது சிந்தாமல் இருக்கப் பிரியாணி அண்டாவில் அதனை வடிய வைத்துள்ளனர்.

கொலையைச் செய்த பின் உடலை மின்விசிறியில் தலைகீழாகத் தொங்கவிட்டுத் துண்டு துண்டாகக் கூறு போட்டுள்ளனர். மேலும், உயிரிழந்த பெண்ணிற்கு மொட்டையடித்து, அவரது இரண்டு கண்களையும் பிடுங்கிவிட்டு, உடல் பாகங்களைச் சூட்கேசில் அடைத்து மிகக் கொடூரமான முறையில் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கைதான தம்பதியினர் காவல்துறை விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
