பெற்ற குழந்தைகளைச் சூடு வைத்து சித்ரவதை செய்த தம்பதி!
பெற்ற பிள்ளைகளைத் தங்களது உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, சிகரெட் மற்றும் கரண்டியால் சூடு வைத்து, பெற்றோரே கொடூரமாகச் சித்ரவதை செய்துள்ள சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சூர்யபேட்டை பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு ஐந்து வயதிலும், இரண்டு வயதிலும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தங்களது தனிப்பட்ட உல்லாச வாழ்க்கைக்கு இந்த இரு குழந்தைகளும் இடையூறாக இருப்பதாக அந்தப் பெற்றோர் கருதியுள்ளனர்.
இதன் காரணமாக, தங்களின் சொந்தக் குழந்தைகள் என்றும் பாராமல் அவர்கள் மீது தொடர் வன்முறையை ஏவியுள்ளனர். சமையல் செய்யும் கரண்டியைப் பழுக்கக் காய்ச்சி உடம்பில் சூடு வைப்பது, எரியும் சிகரெட்டைக் கொண்டு பிஞ்சு உடம்புகளில் சுடுவது எனப் பல மாதங்களாகக் கொடூரமான முறையில் குழந்தைகளைச் சித்ரவதை செய்து வந்துள்ளனர்.
இந்த சித்ரவதையின் காரணமாக, ஒரு பிஞ்சு குழந்தையின் கையில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் அழுகுரல் மற்றும் உடலில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் இது குறித்துக் காவல்துறையினருக்கும், குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் ரகசியத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில், பெற்ற தாயும் தந்தையும் சேர்ந்து தான் இந்தக் கொடூரங்களை அரங்கேற்றினார்கள் என்பது அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து, பெற்ற பிள்ளைகளையே கொடூரமாகத் தாக்கிச் சித்ரவதை செய்த அந்தப் பாசமற்ற தம்பதியைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், படுகாயமடைந்த இரு குழந்தைகளும் பெற்றோரின் பிடியிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தற்பொழுது அக்குழந்தைகள் அரசு காப்பகத்தின் அரவணைப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சொந்தக் குழந்தைகளையே பெற்றோர் இந்த அளவிற்கு மிருகத்தனமாக நடத்தியுள்ள சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
